பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அப்பொய்யாமையைப் பொய்யாது ஆற்றின், அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று’ என்றும் முப்பால் முழங்கும். எனவே அறங்களிலெல்லாம் தலைமணி போன்றது வாய்மை. அவ்வாய்மையே காந்தி யடிகட்குப் பொய்யா விளக்கு. அடிகள் அவ்விளக்கின் துணை கொண்டு அறியாமை இருளை ஓட்டி, இப்பாரினை நேரிய வழியில் செலுத்தினார்.

இவ்வுலக மென்னும் பூக்காட்டில் இதுகாறும் எத்தனையோ மணமலர்கள் அலர்ந்தன. சாக்கிய நாட்டில் சித்தார்த்தன் என்னும் செந்தாமரை கட்டவிழ்ந்து கடிமணம் வீசியது. யூதேயா நாட்டில் ஏசு என்னும் எழில் முல்லை இன்னகை காட்டிற்று. வங்கப் பெரு நாட்டில் விவேகானந்தன் என்னும் செங்கழுநீர் பூத்தது. இப்பேரறிவாளரெல்லாம் கருவிலே திருவுடையார். எதிர்கால வாழ்வில் அவர்கள் நாட்ட விருந்த புகழ் நலம், அன்னார் இளமை வாழ்விலேயே மின்னிட்டு ஒளிர்ந்தது. ஆனால் காந்தியண்ணலின் வாழ்க்கை, அவர்கள் வாழ்க்கையினின்றும் முற்றும் மாறுபட்டது. எதிர் கால வாழ்வில் ‘மகாத்மா’வாக மாறும் அறிகுறி எதுவும் அவர் இளம் பருவ வாழ்வில் தென்படவில்லை; நம்மைப்போல் அவரும் பொய் புகன்றார்; திருடினார்; குலவொழுக்கத்தைக் குப்பையில் தள்ளினார்.

காந்தியடிகள் ‘மோட்பனியா’ என்ற வணிகர் குலத்தைச் சேர்ந்தவர். அக்குலத்தார் புலால் உண்ணும் வழக்கமில்லாதவர்கள். ஆனால் காந்தி-