பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வில்லை என்று சொல்லுவதே வழக்கம். திருமணமானவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ள அவர்கள் வெட்கப்பட்டார்கள். மேலும் இங்கிலாந்து சென்ற மாணவர்களெல்லாம் அந்நாட்களில் ஏதேனும் ஓர் ஆங்கிலக் குடும்பத்தில் தங்கியிருந்து கல்வி கற்பதே பொதுவான வழக்கமாக இருந்தது. அக்குடும்பங்களிலிருந்த திருமணமாகா இளம் பெண்கள், எல்லோருடனும் வேறுபாடின்றி மகிழ்ச்சியாகப் பழகுவார்கள் ; உலாவவும் உடன் செல்வார்கள். திருமணமானவன் என்று தெரிந்தால் அப்பெண்களுடன் நெருங்கிப் பழக முடியாதல்லவா? அந் நாட்டில் பெண்களே கணவன்மாரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கமிருப்பதால் ஆடவரோடு நெருங்கிப் பழகுவதை அவர்களுடைய பெற்றோரும் தடுப்பதில்லை.

காந்தியடிகளையும் இத்தொற்று நோய் பற்றிக் கொண்டது. காந்தியடிகள் அப்போது திருமணமானவர். ஓராண் மகவும் பிறந்திருந்தது. காந்தியடிகள் இயற்கையாகவே நாணம் மிக்கவர். அந் நாண உணர்வு பெண்களிடம் நெருங்கிப் பழக முடியாமல் அவரைத் தடுத்து வந்தது. இருப்பினும் அடிக்கடி பெண்களுடன் சேர்ந்து அவர் உலாவச்செல்லுவார். ஆனால், அவர்களுடன் மிகுதியாகப் பேசமாட்டார், இலண்டனில் ஓர் ஆங்கில மூதாட்டியாருக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டது. அவ்வம்மையார் காந்தியடிகள் பால் பேரன்பு காட்டினார். அடிகளும் அவ்வம்மையாரின் இல்லத்துக்கு அடிக்கடி செல்லுவார். விருந்துகளின் போது காந்தியடிகளை அவர் தவறாது