பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

அழைப்பார். திருமணமாகாத பெண்கள் பலரும் அவ்விருந்தில் கலந்து கொள்வதுண்டு. அப்பெண்களைக் காந்தியடிகளுக்கு அவ்வம்மையார் அறிமுகம் செய்து வைப்பார் ; குறிப்பாகத் தம் வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண்ணை அடிகளோடு நெருங்கிப் பழக விட்டார். சிறிது நாட்களில் அவ்வம்மையாரின் எண்ணம் காந்தியடிகட்குப் புலப்படத் தொடங்கியது. அப்பெண்ணைத் தமக்குத் திருமணம் செய்துவைக்க அவர் முயல்கிறார் என்பதை அடிகள் புரிந்து கொண்டார். இவ்வளவு நாட்களாகத் தாம் மேற்கொண்டிருந்த பொய் வாழ்க்கை அவர் உள்ளத்தை உறுத்தியது. அம் மூதாட்டியாருக்குப் பின்வருமாறு ஒரு நீண்ட முடங்கல் விடுத்தார்:

‘பிரைட்டனில் நாம் முதன் முதலில் சந்தித்த நாளிலிருந்து தாங்கள் என்னிடம் அளவு கடந்த அன்பு காட்டி வந்திருக்கிறீர்கள். என்னைத் தங்கள் மகனாகவே எண்ணி என் பொருட்டுக் கவலை எடுத்து வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பி, அதற்காக இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்து வருகிறீர்கள். ஆனால் செயல் மிஞ்சிப் போவதற்கு முன்னால், தங்களுடைய அன்புக்கு நான் அருகனல்லன் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தங்கள் வீட்டுக்கு வரத் தொடங்கியபோதே நான் இல்லறத்தான் என்பதைத் தெரிவித்திருக்கவேண்டும். இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் திருமணமாகாதவர்போல் நடிப்பதை அறிந்து நானும் அவ்வாறு செய்து வந்தேன். என் தவற்றினை இப்போது