பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உணர்கிறேன். சிறுவனாக இருந்தபோதே எனக்கு மணம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு மகனும் இருக்கிறான். இத்தனை காலம் இவ் விவரங்களைத் தங்களுக்கு அறிவியா திருந்ததன் பொருட்டு என் உளம் வருந்துகிறது. இப்பொழுதேனும் உண்மை சொல்வதற்கு இறைவன் எனக்கு மன உறுதி அளித்ததுபற்றி மகிழ்ச்சியடைகிறேன். என்னைத் தாங்கள் மன்னிப்பீர்களா? எனக்குத் தாங்கள் அறிமுகம் செய்துவைத்த பெண்ணிடம், தகுதியற்ற உரிமை எதையும் நான் எடுத்துக் கொண்டதில்லை யென்று உறுதி கூறுகிறேன். இக்கடிதத்தைப் படித்ததும், தங்கள் அன்புக்கு மாறாக நான் நடந்து கொண்டதாய்த் தாங்கள் கருதினால், அதற்காகத் தங்கள் மீது வருத்தப்படமாட்டேன். தாங்கள் இதுகாறும் என்னிடம் காட்டிவந்த பேரன்புக்கும், செய்த பேருதவிக்கும் என்றென்றும் நன்றி செலுத்த நான் கடமைப்பட்டவனாவேன். இதற்குப் பிறகும் தாங்கள் என்னைப் புறக்கணியாமல், தங்கள் வீட்டுக்கு வரத் தகுதியுள்ளவனாகக் கருதினால் நான் மகிழ்ச்சியடைவேனென்று சொல்ல வேண்டியதில்லை. தங்கள் அன்புக்கு இதை மற்றோர் அறிகுறியாகக் கருதுவதுடன், அவ்வன்புக்கு ஏற்றவனாக நடந்து கொள்வேன்.’

இக் கடிதத்தைப் படித்த அம் மூதாட்டியார் அடிகள் பால் சிறிதளவும் வெறுப்புக்கொள்ளவில்லை. அடிகளின் வாய்மை அவருள்ளத்தை உருக்கியது. உடனே காந்தியடிகளுக்குப் பின்வருமாறு பதில் விடுத்தார் :