பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

ருக்கு எழுதித் தங்கத்தினாலான இரட்டைக் கடிகாரச் சங்கிலி தருவித்தேன். கடையில் செய்து விற்கும் கழுத்துச் சுருக்கு (Tie) அணிவது நாகரிக மன்றாதலால், நானே கழுத்துச் சுருக்கு தைத்துக் கொண்டேன்’ என்று கூறுகிறார். ஆங்கிலக் கனவானைப்போல் நாகரிகமாக உடை உடுத்தாலன்றித் தென்னாப்பிரிக்க இந்தியருக்குத் தொண்டு செய்வது இயலாது என்றுகூட அடிகள் எண்ணினார்.

ஆனால் காலப்போக்கில் ஆடையைப்பற்றிய அவருடைய கொள்கை மாறுபடத் தொடங்கியது. தென்னாப்பிரிக்க உரிமைப் போராட்டத்தின்போது இந்தியக் கூலிகளோடு ஒன்றி வாழ நேரிட்டது. அதுபோது அவ்வேழை இந்தியக் கூலிகளில் தாமும் ஒருவராகக் கலந்துவிட்டார். அவர்கள் உடுத்த எளிய உடையான ‘லுங்கி’யையும், அரைக் கைச் சட்டையையும் தாமும் உடுக்கத் தொடங்கினார். பின் இந்தியா திரும்பியபோது கத்தியவார் நாட்டு மக்களைப்போல் உடை உடுத்தத் தொடங்கினார். நீண்ட கதர்வேட்டி, கதர்ச்சட்டை, அதன் மீது நீண்ட கைகளுள்ள கதர்க்கோட்டு, தலையில் பருத்த கதர்த் தலைப்பாகை, தோளில் கதர்த்துண்டு ஆகிய எல்லாம் அவ்வுடுப்பில் அடங்கும். இவ்வளவு சுமையைத் தூக்கிக் கொண்டு பலவிடங்களிலும் சுற்றுவது அவருக்குப் பிடிக்கவில்லையென்றாலும், நாகரிக வழக்கங்கட்கு மாறுபடாமல் நடக்க வேண்டுமென்ற எண்ணத்தினால் இவை களனைத்தையும் சுமந்து வந்தார். இந்தியாவின் ‘மான்செஸ்டர்’ என்று போற்றப்படும் ஆமதா-