பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழகச் சிற்றூர்களின் வழிச் சென்ற காலை, அங்குள்ள வயற்புறங்களில் வேலை செய்வோர் கோவணம் மட்டுமே அணிந்திருப்பதை அடிகள் கண்டார். இக்காட்சி அவருக்கு வியப்பாக இருந்தது; வட நாட்டில் உழவர்களும் கூடச் சட்டை அணிவது வழக்கம். தம் அருகிலிருந்த தமிழ் நண்பர்களை இதுபற்றிக் கேட்டார். ‘அக்கோவணத்தைத் தவிர வேறு ஆடை வாங்குவதற்கு அவர்களிடம் பணம் ஏது?’ என்று அந்நண்பர்கள் கூறினார்கள். சொந்த நாட்டுச் சோதரர்கள் மானங் காக்கப் போதிய துணியின்றி வாடத் தாம் மட்டும் வேட்டியும் சட்டையும் அணிவது அவருக்குப் பெரும் பாவமாகப்பட்டது. மனச் சாட்சி அவருள்ளத்தை வாள் கொண்டு அறுத்தது. அன்றிலிருந்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ‘இனி இடையில் ஒரு முழத்துணியே அணிவேன். குளிர் காலத்தில் மட்டும் என் உடலை மூடிக்கொள்ள ஒரு போர்வையைப் பயன்படுத்துவேன்’ என்று நண்பர்களிடம் கூறினார். இறக்கும். வரையில் அடிகள் அவ்வுறுதியிலிருந்து தவறவில்லை . கொடுங்குளிர் நாடான இங்கிலாந்து சென்ற போதும், அம்முழத்துண்டுடனேயே சென்றார். இங்கிலாந்தின் பேரமைச்சராயிருந்த சர்ச்சில் கோமகனார் அடிகளை, ‘அரை நிர்வாணப் பக்கிரி’ (Half Naked Fakir) என்று இகழ்ந்தார். காந்தியடிகள் அவ்விகழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அடிகளின் வாய்மை இவ்வாறு விரிவு பெறுகிறது.