பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

இந்திய மக்கள் மேலை நாட்டினரைப் போல் ஆடை அணிவது, இந்தியப் பண்பாட்டிற்கும், தட்பவெப்ப நிலைக்கும், தேசிய உணர்வுக்கும் மாறான செயல் என்று அடிகளின் மனச்சாட்சி அறிவுறுத்தியது. சமயம் நேரும் போதெல்லாம் அடிகள் இக்கொள்கையை வற்புறுத்தத் தயங்கியதில்லை. காசியிலுள்ள இந்துப் பல்கலைக் கழகத்தைப் பற்றி எல்லாரும் அறிவர். அது சிறந்த பல்கலைக் கழகம் என இந்திய மக்களால் கருதப்படுகிறது. அதைத் தோற்றுவித்து முன்னுக்குக் கொண்டு வந்தவர் பழம்பெரும் தேசபக்தரும் பேரறிவாளருமான பண்டித மதன மோகன மாளவியா என்பவர். அப்பல்கலைக் கழகத்திற்கு நிதி திரட்டும் நோக்கத்தோடு அவர் ஒரு விழாக் கொண்டாடினார். அவ் விழாவிற்குத் திருவாட்டி அன்னி பெசண்ட் அம்மையாரும், பல சுதேச மன்னர்களும் வந்திருந்தனர். சுதேச மன்னர்கள் அப்போது அணிந்திருந்த ஆடை அலங்காரம் அடிகளின் உள்ளத்தில் அருவருப்பை விளைவித்தது. அவர்கள். மேலை நாட்டு உடையணிந்திருந்ததோடு, இடையில் வைர மிழைத்த பட்டாக் கத்திகளும், கழுத்தில் முத்துக் கோவைகளும், நவமணிகள் பதித்த பொன்னரி மாலைகளும் அணிந்திருந்தனர். அடிகள் அப்போது வெறும் ‘காந்தி’யாக இருந்த காலம். ‘மகாத்மா’வாக இன்னும் மாறவில்லை.

பண்டித மாளவியா பலரையும் பேசுமாறு அழைத்தார். காந்தியடிகளின் முறை வந்தது. தம்

3