பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

யில்லாதான்’ ‘அறவாழி அந்தணன்’, ‘எண் குணத்தான்’ என்ற தொடர்களே கடவுளைக் குறப்பிடுகின்றன. இச்சொற்றொடர்கள் எல்லாச் சமயக் கடவுள்களுக்கும் பொருந்தும். இனி வள்ளுவரின், சமயக் கொள்கைகள் காந்தியத்தோடு எவ்வாறு பொருந்துகின்றன எனக் காண்போம்.)

தமக்குச் சமயத்தைப் பற்றிய சிந்தனைகள் எப்பொழுது தோன்றின என்பது பற்றிக் காந்தியடிகள் ‘சமயத் தோற்றங்கள்’ என்ற தலைப்பில் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்; அத் தலைப்பின் கீழ், இளமைக் காலத்தில் தம் உள்ளத்தில் ஏற்பட்ட நிலையற்ற சமயக் கருத்துக்களைப் பற்றிக் கூறிக் கொண்டு செல்கிறார்; பள்ளியில் சமயத்தைப் பற்றி எதுவும் அக் காலத்தில் சொல்லிக்கொடுக்கப்படாததைப் பெரும் குறையாக எண்ணுகிறார். காந்தியடிகள் குஜராத்தி நாட்டு மோடபனியா வகுப்பைச் சார்ந்தவரென்றும், அவ்வகுப்பினரெல்லாம் வைணவ சமயத்தில் பெரும் பற்றுக் கொண்டவர்களென்றும் முதலிலேயே குறிப்பிட்டேன். அக்குலவழக்கத்திற்கேற்பக் காந்தியடிகளும் அடிக்கடி திருமாலின் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அடிகளுக்குப் பேய் பிசாசுகளைப் பற்றிய அச்சம் இளமையில் இருந்தது. அவ்வச்சத்தைப் போக்கிக்கொள்ள, வீட்டு வேலைக்காரி அரம்பையின் அறிவுரைப்படி, இராமநாமத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கினார். அதன் பிறகு பேய் பிசாசுகளைப் பற்றிய அச்சமும் அவருள்ளத்தை விட்டு நீங்கியதாம். எனவே, அவர் பிற்காலத்தில்