பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பையும் இசுலாத்தைப் பற்றிய வேறு சில நூல்களை யும் வாங்கிப் படித்தார். சமயம் நேரும் போதெல்லாம் இசுலாத்தின் பெருமையை எடுத்துக்கூறிக் காந்தியடிகளைத் தம் சமயத்தின்பால் அப்துல்லா சேத் இழுக்க முயன்றார். இச்சமயங்களில் எல்லாம் தம் உள்ளத்தில் எழுந்த எண்ணங்களை அடிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘கிருத்தவ சமயக் கொள்கைகளில் எனக்குப் பல ஐயப்பாடுகள் எழுந்தன. ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரப் புதல்வர் என்றும், அவரிடம் நம்பிக்கை வைப்போர் மட்டும் வீடுபேற்றைப் பெறுவர் என்றும் அச்சமயத்தார் கூறிய சொற்களை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு மக்கள் இருக்கக்கூடுமானால், நாம் எல்லோரும் அவருடைய மக்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவரானால், அல்லது கடவுளேயானால், உலக மக்கள் எல்லோரும் கடவுளைப்போன்றவராகவோ அல்லது கடவுளேயாகவோ ஆதல் கூடும். ஏசு நாதர் தம் இறப்பினால், தாம் வடித்த குருதியால், உலகத்தின் பாவங்கள் எல்லாவற்றிற்கும் கழுவாய் தேடி விட்டார் என்பதை என் அறிவு அப்படியே ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை. இக்கொள்கையை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாதென்றும், உட்கருத்தை நோக்க வேண்டுமென்றும் எனக்குத் தோன்றியது. மற்றும், மக்களினத்திற்கே ஆன்மா உண்டு என்பதும், மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாதென்பதும், அவை சாவின்போது அடியோடு அழிந்துவிடுகின்றன என்பதும் கிருத்தவக்