பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூன்முகம்

புத்தரின் கொள்கைகள் ‘பௌத்த’மாக உருப் பெற்றன. ஏசுவின் கொள்கைகள் ‘கிருத்தவ’மாக மலர்ந்தன. காரல் மார்க்ஸின் பொருளியல் தத்துவம் ‘மார்க்சியம்’ என்ற பெயரால் போற்றப்படுகிறது. அதே போல் இந்நூற்றாண்டில் நம் கண்ணெதிரில் வாழ்ந்து, உலக அமைதிக்குப் பாடுபட்ட காந்தியடிகளின் கொள்கைகளைக் ‘காந்தியம்’ என்ற பெயரால் உலகினர் அழைக்கின்றனர். காந்தியத்தைப் பல கோணங்களில் ஆராய்த்து மேலை நாட்டினரும், இந்திய அறிஞர்களும் பல அரிய நூல்கள் எழுதியுள்ளனர். அவை உலக மக்களுக்கு அரிய கருவூலமாகும். நான் இச்சிறு நூலில், காந்தியத்தின் அடிப்படைக் கொள்கைகளை வள்ளுவரின் தலையாய கொள்கைகளோடு ஒப்பிட்டு, அவ்விரண்டின்பாலும் பொருந்தியுள்ள ஒருமைப்பாட்டினை எடுத்து விளக்கியுள்ளேன். அடிகள் வாழ்வில் இடம்பெற்ற சுவையான நிகழ்ச்சிகளை ஆங்காங்கு எடுத்து மேற்கோள்களாகப் பயன்படுத்தியிருக்கிறேன். மாணவர்களின் பிஞ்சுள்ளத்தை ஏற்ற முறையில் வளர்ப்பதற்கு, இந்நூல் சிறிதளவாவது பயன்படும் என்று ஆசிரியப் பெருமக்கள் கருதினால், நான் உண்மையில் பெருமகிழ் வெய்துவேன். இந்நூலைச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ள சிவலிங்க நூற்பதிப்புக் கழகத்தார்க்கும், இந்நூல் செம்மையாக வெளி வருவதற்கு அரும்பணியாற்றிய புலவர் பு. செல்வராசனார் அவர்கட்கும் என் உளங்கனித்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேலம்,  மு.ச
20—1—60