பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

அப்பாற்பட்டது. உண்மை வைணவன் யார் என்பதை அவரே விளக்குகிறார்.

காந்தியடிகளின் வழிபாட்டுப் பாடல்களில் உள்ளத்தை உருக்கும் தன்மையது, ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று தொடங்கும் பாடல். அப்பாடல் நரசிம்ம மேத்தா என்பவரால் எழுதப்பட்டது. அப்பாடலில் வைணவனின் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. அவை பின் வருமாறு:

‘பிறருடைய துன்பங்களை உணர்கிறவனும், துன்பப்படுவோர்க்கு இரங்கி நன்மை புரிபவனும், உள்ளத்தில் சிறிதும் செருக்கற்றவனும் வைணவன்.

‘உலகில் எல்லோர் முன்பும் பணிவு காட்டி, எவரையும் இகழாது இன்சொல் பேசி, உள்ளம் வாய் மெய் ஆகிய மூன்றினாலும் கவலையற்றிருப்பவனே வைணவன்.

‘எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணிப் பற்றை ஒழித்துப் பிற பெண்டிரைத் தாயென மதித்து, உள்ளத்தாற் பொய்யிலனாகிப் பிறன் பொருளை வெஃகாதவனாய் வாழ்பவன் வைணவன்.

‘மாயையால் அசையாது உறுதிப்பாடு கொண்டு, இராமநாமத்தில் ஈடுபாடு மிக்கவனாய் வாழ்பவன் வைணவன்.

‘பொய்யுரை, கயமை ஆகியவற்றினின்றும் விலகிப் பற்று, இன்ப விருப்பம், சினம் முதலியவற்றை அடக்கி ஆள்பவனே வைணவன்.4.