பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

மக்களினம் எல்லாம் ஒன்றென உணர்ந்தவர்கள்; ஆதலின் இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்புடையவர்கள்.

“இன்னா செய்தார்க்கும் இனியவை செய்வதில் அவர்கள் பேரின்பம் அடைவார்கள்.”

இப்பாடலின் இறுதி வரிகள் அடிகளின் இளமை உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தன. மேற்கூறிய பாடல்களில் காணப்படும் கருத்துக்களே இவருடைய சமயம். இக்கருத்துக்கள் படிந்துள்ள சமயங்கள் யாவும் அடிகளின் சமயங்களே.

காந்தியடிகளின் முற்போக்குக் கருத்துக்களும், பொதுமை எண்ணங்களும், தீண்டாமைக் கொள்கையும், தீவிர இந்துக்களுக்குப் பிடிப்பதில்லை. இந்து சமயத்தைப் பாழ் செய்ய வந்தவர் என்று அடிகளைக் குறை கூறினர்; குற்றம் சாட்டினர். அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இளமையிலிருந்து கோவில்களின் பால் அடிகள் கொண்ட வெறுப்புணர்ச்சியும் ஒரு காரணமாகும்.

வைணவக் குடும்பத்தில் பிறந்தவனாதலின் பள்ளிப் பருவத்தில் நான் அடிக்கடி திருமால் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆயினும் கோவில் என்னுள்ளத்தைக் கவரவில்லை. அங்குள்ள ஆடம்பரமும் பகட்டும் எனக்குப் பிடிக்கவில்லை. அங்கே பல தீச் செயல்கள் நடைபெறுகின்றன வென்றும் கேள்விப்பட்டேன்.