பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. சாதி

‘எனக்குத் தோட்டித் தொழிலில் விருப்புண்டு. எனது ஆசிரமத்தில் பதினெட்டு வயதுப் பார்ப்பணச் சிறுவன், ஆசிரமக் குப்பை கூட்டும் வேலையைக் கற்க வேண்டித்தான் தோட்டி வேலை செய்கிறான். அவ்விளைஞன் சீர்திருத்தக் காரணல்லன். அவன் வைதிகத்தில் பிறந்து வளர்ந்தவன். அவன் நாடோறும் கீதை பாராயணஞ் செய்பவன் ; சந்தியாவந்தனம் முதலியவற்றை முறையே நிகழ்த்துபவன். அவனது வடமொழி உச்சரிப்பு என்னுடையதினும் நன்றாயிருக்கிறது. இறை வழிபாட்டின் போது அவன் பாடும் இனிய இசை, உள்ளத்தை உருக்கி அன்பு வண்ணமாக்குகிறது. குப்பை கூட்டுந் தொழில் பயில்வது, கடமை நிறைவேற்றத்தில் ஒன்றென்றும், ஆசிரமக் குப்பைக்காரர் செவ்வனே வேலை செய்ய வேண்டுமானால், தான் அத்தொழிலில் வல்லவனாயிருந்து வழிகாட்டியாய் அமைதல் வேண்டுமென்றும் அவன் உணர்கிறான்’ என்று கடமையின் சிறப்பைக் காந்தியடிகள் விளக்குகிறார். இச்சொற்களிலிருந்து, தொழில் கடமையின் அடிப்படையில் அமையவேண்டுமே யன்றிச் சாதியின் அடிப்படையில் அமைவது கூடாது’ என்ற சிறந்த உண்மையை நாம் உணரலாம்.