பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

நம் இந்து சமுதாயத்தில் ‘வருணாச்சிரமக் கொள்கை’ என்பதொன்று வழங்கி வருவதை நாம் அறிவோம். அக்கொள்கை சிறந்த அடிப்படையில் தோன்றியது. ஆனால் பிற்காலத்தில் அதன் பயன் தீதாக முடிந்தது. முதன் முதலில் ஒவ்வொருவரும் செய்த தொழிற் சிறப்பின் வகையால், வருணப் பிரிவுகள் ஏற்பட்டன. ஆனால் அதே வருணப் பிரிவுகள் பிறப்பின் வகையால் வேரூன்றிவிட்டன. காந்தியடிகள் வருணச்சிரமக் கொள்கையில் நம்பிக்கையுடையவர். ஆனால் அவர் அக்கொள்கைக்குப் பொருள் கொண்டவிதமும், கடைப்பிடித்த முறையும் வேறு. ‘ஒவ்வொருவனும் தாழ்ந்தவனாகவே (சூத்திரன்) பிறக்கிறான். ஒவ்வொருவர் உள்ளத்திலும் தவ விதை உண்டு. எவன் முயற்சியால் அதை முளைக்குமாறு செய்கிறானோ அவன் தாழ்ந்த இனத்தில் பிறந்தவனயினும் மேலானவன். உயர்குலத்தில் பிறந்தும் தவத்தைக் கைவிடுவானாயின், அவன் தாழ்ந்தோனாவான். கிடைத்த அளவு உள்ள நிறைகொள்ளல், பிறர் குற்றம் மன்னிக்கும் நீர்மை, மன அடக்கம், உண்மையில் நாட்டம், வித்தை விருப்பம், வாய்மை, சினமின்மை, தூய்மை ஆகிய பண்புகள் அறத்தின் குறிகளாம். இப்பண்புகளை எவர் செவ்வனே பயின்று முறையாகச் செயலில் கொணர்கிறாரோ அவர் எவராயினும் மேலான நிலையடைவர்’ என்பது அடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இக்கொள்கைகள் வள்ளுவப் பெருமான் அருளிய ‘மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்

5