பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பல்வேறு வடிவங்களே. காந்தியடிகளும் அருளறத்திற்குப் பல விடங்களில் பலவிதமான விளக்கங்கள் கொடுக்கிறார். அவ் விளக்கங்களை யொட்டி, அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளும் அமைந்திருக்கின்றன.

அருளறம் என்னும் வித்தை முதன் முதலில் அடிகளின் உள்ளத்தில் ஊன்றிய பெருமை, ஏசுநாதரின் மலைச் சொற்பொழிவையே சாரும். அவ்வித்து முளைத்துச் செடியாகிப் பின் கவடு விட்டுப் பெருமரமாக மாறுவதற்குக் காரணமாக இருந்த நூல் கீதையாகும். அப் பெருமரம் புயலுக்கும் அயராது நிலைபேறு கொள்ளும் பொருட்டுத் தாங்கி நிற்கும் விழுதுகளாக அமைந்தன தால்ஸ்தாயின் நூல்கள்.

அடிகள் வாழ்வில் அருளறத்தின் தொடக்கம் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர்கள் புகை வண்டியில் எப்பொழுதும் மூன்றாம் வகுப்பிலேயே செல்லவேண்டும். இரண்டாம் வகுப்பிலோ அல்லது முதல் வகுப்பிலோ அவர்கள் செல்வதற்கு முடியாது. காந்தியடிகள் தாதா அப்துல்லா கம்பெனியாரின் வழக்குப் பற்றி டர்பன் நகரிலிருந்து பிரிட்டோரியா செல்லவேண்டியிருந்தது. பிற்கால வாழ்வில் ஏழை மக்களுடன் மூன்றாம் வகுப்பிலேயே பிடிவாதமாகப் பயணம் செய்த காந்தியடிகள், இளமைக் காலத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்வதைப் பெருமையாகக் கருதிக் கொண்டிருந்தார். மேல்நாடு சென்று பார்-அட்-லா பட்டம் பெற்ற வழக்கறிஞரான தாம், மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வது கேவலம்