பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அழிய நேரின், எஞ்சியுள்ள ஒரு சிலராவது அக்கலைக் கருவூலத்தைப் பெற்றுப் பயன் துய்க்கலாமன்றோ ? மக்களினம் அழிவுற நேரினும், பல்லாயிரம் ஆண்டுப் பெருமுயற்சியால், பல பேரறிஞர்களால் யாக்கப்பட்ட அப்பெரு நூல்கள் அழியாமலிருக்கவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உருசிய மக்களின் குறிக்கோளாக இருக்கலாம். அவ்வறிவுச் சரக்கறையில் குறளும் இடம் பெற்றிருக்கிறது. குறளுக்கு வாய்த்த இச்சிறப்பு வியத்தற்குரியதன்று எனினும், இச் செய்தியைக் கேட்குந்தோறும், தேனருவித் திரை எழும்பி நம் காதின் வழி ஒழுகும்.

இப் பெற்றித்தாய பேரின்பத்தை ஹோமர் என்ற மாகவியைப் பெற்றெடுத்த கிரேக்கரும், வர்ஜியைப் பெற்றெடுத்த உரோமானியரும், சேக்ஸ்பியரைப் பெற்றெடுத்த ஆங்கிலேயரும், விக்தர் ஹியூகோவைப் பெற்றெடுத்த பிரெஞ்சியரும், கெதேயைப் பெற்றெடுத்த ஜெர்மானியரும் தால்ஸ்தாயைப் பெற்றெடுத்த உருசியரும், காளிதாசனைப் பெற்றெடுத்த இந்தியப் பெருமக்களும் ஒருங்கே நுகரப்பெறுவர்.

ஆங்கிலப் பேரரசு இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் பெரும்பகுதியைத் தன்னகத்தில் அடக்கிக்கொண்டு வீறு பெற விளங்கியது. உலகின் மூலை முடுக்கெல்லாம் ஆங்கிலேயரின் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. ஆங்கில நாட்டின் மூளை என்று அறிஞர்களால் பாராட்டப்படுபவனும், அரசியல் வல்லுநனும், கேட்டாரப்-