பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

அச்சமும் தோன்றிற்று. அதனால் உடம்பும் நடுங்கிற்று.

“நியாயமாக எனக்கு உள்ளே இடங்கொடுத்திருக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல் என்னை இங்கே உட்காரச் சொன்னீர், இப்போது நீர் இன்பமாகச் சுருட்டுக் குடிப்பதற்காக உம் காலடியில் உட்காரச் சொல்கிறீர். இது சரியன்று. உள்ளே இடங்கொடுத்தால் போய் உட்கார்ந்து கொள்கிறேன். படியில் உட்கார முடியாது” என்று அடிகள் திட்டமாகச் சொல்லிவிட்டார்.

காந்தியடிகள் இப்படிச் சொல்லி முடிப்பதற்குள் வண்டியின் தலைவன் அருகில் நெருங்கினான்; அடிகளின் கன்னத்தைப் பார்த்து ஓங்கி அறைந்தான்; கையைப் பிடித்து கீழே இழுத்து விட முயன்றான். அடிகளின் மன உறுதி அப்போது பெரும் சோதனைக்கு உள்ளாகியது. வண்டிப் பெட்டியின் பித்தளைக் கம்பிகளை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். மணிக்கட்டு முறிந்தாலும் பிடியை விடுவதில்லை என்று உறுதி கொண்டார். அவரை அந்தக் கொடியோன் அடிப்பதையும், திட்டிக் கொண்டே இருப்பதையும் மற்றப் பிரயாணிகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அடித்தவன் பெருந்தடியன்; அடிபட்டவரோ வலுவற்று மெலிந்த மனிதர். அந்த வெள்ளைக்காரப் பிரயாணிகளுள் சிலர் இரக்கம் அடைந்தார்கள். வண்டியின் தலைவனைப் பார்த்து, ‘ஏன் அப்பா அவரை அடிக்கிறாய்? அவர் சொல்லுவது நியாயந்தானே? அங்கே இடமில்லா-

6