பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


என்று அக்காவற்காரன் நினைத்தான். ஏனென்றால் தென்னாப்பிரிக்க நகரங்களின் முக்கிய நடைபாதைகளில், கறுப்பர்கள் நடக்க இடங் கொடுக்கப்படுவதில்லை.

முன்பின் பார்க்காமல், ஒரு சொல்லும் கூறாமல் விரைவாக ஓடிவந்து அவன் காந்தியடிகளைக் காலாலுதைத்து நடைபாதையிலிருந்து தள்ளிவிட்டான். அடிகள் திடுக்கிட்டார்; மெதுவாக எழுந்தார்; அவனைக் காரணம் கேட்க வாயைத் திறந்தார். அப்போது எதிர்ப்புறத்திலிருந்து அவருடைய வெள்ளைக்கார நண்பரொருவர் குதிரை மீது சவாரி செய்து கொண்டு வந்தார். அவர் அடிகளைப் பார்த்து, 'மிஸ்டர் காந்தி! இங்கு நடந்த அநீதியை நான் கண்ணால் கண்டேன். இவன் செயல் மிகவும் கொடியது. நீங்கள் இவன் மீது வழக்குத்தொடருங்கள். நான் சாட்சி சொல்லுகிறேன்' என்று கூறினார். ஆனால் காந்தியடிகள் அதற்கு உடன்படவில்லை.

'அன்பரே இதில் வழக்குத் தொடர வேண்டிய இன்றியமையாமை என்ன இருக்கிறது? இவன் ஆயிரக்கணக்கான இந்தியரிடம் நடந்து கொள்வது போலவே என்னிடமும் நடந்து கொண்டான். உங்களைப்போன்று படித்து நாகரிகம் பெற்ற வெள்ளையர்களே எங்களைக் 'கூலி' என்று கருதி வெறுக்கும் போது, ஒன்றுமறியாத இக்காவற் காரனைக் குறை கூறுவதில் எவ்விதப் பயனுமில்லை. குற்றம் உம்மைப் போன்ற பெரிய மனிதர்களுடையது!' என்று அடிகள் அமைதியாகக் கூறினார்.