பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


காந்தியடிகளின் ஆசிரமம் சபர்மதியாற்றங் கரையில் ஏற்படுத்தப்பட்டது. அவ்விடம் ஒரு காடு. ஆசிரமத்தில் பாம்புகளின் நடமாட்டம் மிகுதியாயிருந்தது. ஆனால் ஆசிரம வாசிகள் பாம்பை அடிப்பதுமில்லை; அவைகள் யாரையும் கடிப்பதுமில்லை. காந்தியடிகளின் அருளறத்தைக் கொடும் பாம்புகளும் உணர்ந்தன போலும்!

ஒரு முறை காகா காலேல்கர் காந்தி யடிகளோடு எரவாடா சிறையில் இருந்தார். காலையில் பல் துலக்குவதற்காகச் சிறையிலிருந்த வேப்ப மரத்தில் ஒரு குச்சியை ஒடித்தார். ஒடிக்கும்போது சற்றுப் பெரிய கொம்பாக ஒடித்துவிட்டார். இதைக் கண்ட அடிகள், 'காகா! தாவரங்களுக்கும் உயிரும் உணர்வுமுண்டு என்ற உண்மையைத் திருவாளர் ஜகதீச சந்திரபோஸ் கண்டறிந்து உலகுக்கு வெளியிட்டுள்ளார். இது உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார். 'தெரியும்' என்று விடை யளித்தார் காலேல்கர்.

'பின் ஏன் மரத்தின் கிளையை ஒடிக்கிறாய்? தன்னுடைய உடலிலிருந்து ஓர் உறுப்பை இழந்தால் அம்மரம் துன்புறாதா?' என்று கேட்டார். இனிமேல் தாம் அவ்வாறு செய்வதில்லை என்று கூறி மன்னிப்புப் பெற்றார் காலேல்கர். என்னே அடிகள் அருளறத்தின்பால் கொண்ட பற்று!

பிறருடைய துன்பத்திற்காக இரங்குவது மட்டும் அநளறமாகாது என்பது வள்ளுவர் கொள்கை. அறிவுடைய மனிதன் என்பவன், பிறருடைய துன்-