பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


காலையில் ஆசிரம உறுப்பினர்களைக் கலந்து ஆலோசித்தார். அவர்களும் ஒப்புதல் அளித்தனர். அடிகளின் அறைக்குப் பக்கத்திலேயே சாஸ்திரியாருக்கு ஒரு சிறு குடிசை போடப்பட்டது. அடிகள் நாள்தோறும் சாஸ்திரியாரின் புண்களைத் தம் கையாலேயே அலம்பி, மருந்திட்டுக் கட்டினார்; நோய் தீருவதற்கேற்ற உணவை நாள்தோறும் கொடுக்குமாறு ஏற்பாடு செய்தார்; அன்றாடம் உணவைப் பார்வையிட்ட பிறகே சாஸ்திரியாருக்கு அனுப்புவார்.

அப்போது நாட்டில் அரசியற் கொந்தளிப்பு மிகுந்திருந்தது. சட்ட மறுப்பைத் துவக்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களில் அடிகள் ஈடுபட்டிருந்தார்; இடைவிடாத பல அலுவல்களுக் கிடையிலும், நாள்தோறும் காலையில் உலாவிவிட்டுத் திரும்பியதும், நேராகச் சாஸ்திரியின் குடிலுக்குச் செல்லுவார்; அவருடன் அன்புடன் உரையாடுவார்; சிரித்து மகிழ்வார். சாஸ்திரி வட மொழியில் பேரறிஞர்; கவிதை இயற்றுவதில் வல்லவர். அவருடைய கவிதைகளைக் கேட்டு அவற்றின் இன்பத்தில் அடிகள் திளைப்பார். வாரந்தோறும் மௌன விரதம் கடைப்பிடித்தொழுகும் நாட்களில், மரத்திலிருந்து புதிதாகப்பறித்த ஆரஞ்சுப் பழம் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு சாஸ்திரியாரிடம் செல்வார்; அப்பழத்தை அன்புடன் கொடுப்பார். இருவரும் அன்பைப் பரிமாறிக் கொள்வர்.

சாஸ்திரியார் இரண்டாண்டுக் காலம் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். நோய் பெரும்பாலும் குண-