பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


மாகிவிட்டது. காந்தியடிகள் இத்தொண்டின் மூலம் அருளறத்தின் உச்சிக்கே சென்று விட்டார் என்று கூறலாம்.

'அன்பு அறத்திற்கு மட்டுமே துணையாவது என்று அறியாதவர்கள் கூறுவார்கள். ஆனால் மறத்தை நீக்குதற்கும் அன்புதான் துணை செய்கிறது' என்று பொய்யா மொழியார் கூறுகிறார்.

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை."

அருளறம் கோழையின் கருவி என்று சிலர் கருதுகின்றனர். அச்சத்தின் காரணமாகவே 'அஹிம்சை' தோன்றுகிறது என்று சிலர் எள்ளி நகையாடுகின்றனர். ஆனால் அஞ்சாமையிலிருந்தே அருளறம் தோன்றுவதாக அடிகள் கூறுகிறார்.

அடிகளின் அருளறம் அஞ்சாமையின் அடிப்படையிலேயே தோன்றியது என்பதை அடிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் மூலம் காண்போம். அடிகள் முதன் முறை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதும், தென்னாப்பிரிக்க இந்தியர் வெள்ளையரின் கொடுமைக்கு ஆட்பட்டு வருந்தும் நிலையைப் பம்பாய், பூனா முதலிய இடங்களில் பெருங்கூட்டங்கள் கூட்டிப் பேசினார்; செய்தித் தாள்களில் கட்டுரையாக எழுதி வெளியிட்டார்; சிறு நூலாக அச்சிட்டு நாடெங்கும் விற்பனை செய்தார். இதை அறிந்த தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் காந்தியடிகளின் மேல் அடங்காச் சினம் கொண்டனர்.