பக்கம்:வாடா மல்லி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 சு. சமுத்திரம்


அடியற்றுப் போனவளும் இவள்தான். வட்டமுகம், நீண்டுவிட்டது. கன்னங்கள் குழிகளாகி, மோவாயைத் தனித்துக்காட்டி, ஒருவித பரிதாபத்தையும் பயங்கரத்தையும் ஒரு சேரக் கொடுத்தது. அவள் தன் பக்கத்தில் நின்ற பத்து வயது மகளை, சுயம்பு பக்கம் தள்ளிவிட்டாள். ஆனால் அந்தப் பெண்ணோ முற்றவிட்ட முருங்கைக்காய் மாதிரியான அம்மாவின் கைக்குள் மீண்டும் ஒடுங்குகிறாள். அப்போது ஒரு பதினாறு பதினேழு வயதுப் பயல் உள்ளே இருந்து வருகிறான். ஆறுமுகப்பாண்டியின் முதல் பதிப்பு. அவனைப் போலவே, உருவமும், உள்ளடக்கமும். சுயம்புவை, உன்னிப்பாய்ப் பார்த்தான். மோகனா ஒரு அச்சடி சேலையோடு சின்ன அண்ணனை அமங்கலமாய்ப் பார்த்தாள். அவள் முகத்தில் சிற்சில காய்ப்புக்கள். வாடவிட்ட பூக்களைச் சுமக்கும் வதங்கிய கொடி மாதிரியான தோரணை.

சுயம்பு அவர்களையும் பார்த்தான். அவர்களும் தனக்குத் தெரியும் என்பதுபோல் தலையாட்டிவிட்டுக் கேட்டான்.

“அக்காவை. அக்காவை எந்த ஊர்ல கொடுத்திருக்கு? எத்தனை குழந்தை இருக்குது?”

இப்போது எல்லோரும் சேர்ந்து புலம்புகிறார்கள். ஆறுமுகப்பாண்டி அடக்க முடியாமல் தம்பியைக் கட்டிப் பிடித்து ஓலமிடுகிறார். பிள்ளையார் பேச முடியாமல் விக்குகிறார். வெள்ளையம்மாவின் கை பாதி தலையிலும், பாதி அந்தத் துாணிலும் அடித்துக் கொள்கிறது. மோகனா, தலையைத் தாழ்த்திக் கொள்கிறாள். கோமளம் மகளைப் பற்றுக்கோலாகப் பிடித்துக்கொண்டே போயிட்டாளே. நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாளே, போகக்கூடாத இடத்துக்குப் போயிட்டாளே என்று புலம்புகிறாள். இதுவரை எந்தச் சலனமும் இல்லாமல் நின்ற அந்த விடலைப்பயல் அம்மாவை ஆசுவாசப்படுத்துகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/376&oldid=1251105" இலிருந்து மீள்விக்கப்பட்டது