பக்கம்:வாடா மல்லி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 சு. சமுத்திரம்


சிறிது பின்வாங்கிய தோழிகளை இழுத்துப் பிடித்த படியே, மேகலை, ஊரில், வீட்டுக்குப் போன வேகத்தைப் போல் ஒரு வேகத்துடன் நடந்தாள். அங்கிருந்த எல்லா அலிகளும், கும்பல் கும்பலாய் ஒடி வந்தார்கள். மேகலை, முதலில், தெரிந்த மேட்டுக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள். புடவையின் உட்பக்கத்தை வெளிப்பக்கமாக்கி, ‘புதுச்சேலை கட்டிக்கொண்டிருந்த குருவக்கா, சிறிது அசந்து நின்றாள். பிறகு புடவை முனையை அப்படியே விட்டுவிட்டு “அடியே என் ராசாத்தி” என்று கட்டிப் பிடித்துக் கொண்டாள். அந்த அணைப்பின் சுகத்தோடு, மேகலை, அவள் தோளில் கிடந்தபோது, அவள் தோழிகள் கொசுக்கடித்த கால்களை ஒன்றோடொன்று தேய்த்தார்கள். நீலிமா தன்னை இம்சை செய்த கொசுக்களை டோலக்கை அடித்து அடித்துத் துரத்தப் போனாள்.

மேகலை, குருவக்காவின் தோளிலிருந்து விடுபட்டு லேசாய்க் கேட்டாள்.

“எங்கம்மா...எப்படி இருக்காள்:” “ஏதோ இருக்காள்.” “எப்படிக்கா என்னை அடையாளம் கண்டே.” “நாங்க நெனச்சாக்கூட ஒன்ன மறக்க முடியாது.டி. நாங்கதான் ஒன்ன கடத்துனோம்னு போலீஸ்காரங்க எங்களப் படுத்தன பாடு...அடிச்ச அடி... அவனுவ வீட்டிலயும் ஒரு பொட்டை விழ. இப்போகூட பழைய கேஸ் இருக்குதுன்னு புதுப் போலீஸ்காரன் கூட கேப்பான். அவங்களே ஒன்ன அடிச்சுக் கொன்னுருப்பாங்களோன்னு எங்களுக்கும் பயம். அந்தப் பயத்தை பயந்துகிட்டே சொன்ன பிறகுதான் போலீஸ்காரன் எங்கள விட்டு வச்சான்.”

“ஒங்கள ரொம்ப சிரமப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடுங்க.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/386&oldid=1251117" இலிருந்து மீள்விக்கப்பட்டது