பக்கம்:வாடா மல்லி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 371


ஒடி வந்தார்கள். வெளிமன அவமானச் சுவடுகளும் அவற்றின் எச்சங்களான அச்சங்களும் அடிமனக் கோபாவேசத்திற்கு வழிவிட்டன, தெரு நாய்கள், வேட்டை நாய்களாயின. வீட்டுப்பூனைகள் காட்டுப் பூனைகளாயின. உள்ளேயும், வெளியேயும் ஒரே சத்தம்.

தொலைவிலிருந்து கல்விச்சு. அருகிலிருந்து எழுத்தில் கொண்டுவர முடியாத இதயம் பதித்த வசவுகள். சிலர் ஆவேசப்பட்டு உடைகளைத் துக்கியதும் உண்மைதான். அந்தச் சேரியே பற்றி எரிவது போலிருந்தது. வயிற்றில் எரிந்தது, அந்த வளாகத்தையே எரிப்பதுபோல் தோன்றியது. சரமாரியான கல்விச்சு. கதவடைப்பு. அந்தப் போலீஸ் அதிகாரி துப்பாக்கிப் பக்கம் கையைக் கொண்டு போனார். மேகலை அந்தத் துப்பாக்கியின் குழாயைத் தனது கைகளால் மூடினாள். உடனே டில்லிக்காரிகள் அவளையும் அந்தத் துப்பாக்கிக்காரரையும் அங்கு மிங்குமாய் தள்ளினார்கள். கூச்சல் போட்டார்கள். குமுறிக் குமுறி முழங்கினார்கள். ஏச்சுக்கள், அந்த ஏரியாவின் எல்லையைத் தாண்டின.

அந்த போலீஸ் ஆசாமி, அதிர்ச்சியடைந்தார். ஆழம் தெரியாமல் காலை விட்ட கவலை. துப்பாக்கியால் சுட்டால் எத்தனைபேர் சாவார்கள்? எஞ்சியவரை என்ன செய்யமுடியும்? ஆறே ஆறு லத்திக்கம்புகள் என்ன செய்ய முடியும்? அவர் பின்வாங்கப் போனார். இரவில் ரதகஜ துரக பதாதிகளோடு வரலாம் என்றால், ஒரு வழியடைப்பு. போதாக்குறைக்கு, பென்சிலும் குறிப்பு நோட்டுமாய் ஏழெட்டுப்பேர். செகரட்டேரியட் பிரஸ்மென். வீட்டுக்குத் திரும்பியவர்கள், சத்தம் கேட்டு வந்ததுபோல் தெரிந்தது. ஜோல்னாப் பையை ஒரு கையால் தடவி மறுகையால் மோவாயைத் தடவி அங்குமிங்குமாய் சூழ்ந்தார்கள். மேகலையிடம் ஒரு பேட்டி, நீலிமாவிடம் ஒரு பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/393&oldid=1251125" இலிருந்து மீள்விக்கப்பட்டது