பக்கம்:வானொலியிலே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவிரியும் உறையூரும் 33

பயன்பட்டு வந்திருக்கின்றன. சோழ மன்னர்களை வாழ்த்திய புலவர் பெருமக்கள் காவிரியாற்று எக்கரிட்ட மணல்களை விட அதிக ஆண்டுகள் வாழ வேண்டும் என வாழ்த்தியிருக்கிறார்கள். சோழர் அரசும் அவ்விதமே உறையூரில் வாழ்ந்து வந்தது. சோழர் குடிதோன்றிய காலம் நமக்குத் தோன்றவில்லை. கல்வெட்டுகளும் காட்ட வில்லை. பதியெழு வறியாப் பழங்குடியினர் என்றும் மண் தோன்றிய காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினர் என்றும் புலவர்கள் கூறியிருக்கிறார்கள். சோழரும் பாண்டியரும் சூரியவம்சம், சந்திரவம்சம் என - அதாவது ஞாயிறு வழியினர், திங்கள் வழியினர் என - அழைக்கப் பட்டார்கள். அவர்களும் ஞாயிறு வட்ட திங்கள் வட்டக் குடைகளைப் பிடித்திருந்தனர். இது அவர்களின் பழமை யைக் காட்டுகிறது போலும்.

அரங்கம் என்பது ஆற்றிற்கிடையிலுள்ள மேட்டின் பெயராகும். காவிரியாறு உறையூருக்கு எதிரில் வந்து இருபுறமும் சுற்றிச் சூழ்ந்து ஒரு திரு அரங்கத்தையும் திரு அரங்கரையும் திரு அரங்க நகரையும் உண்டாக்கி இருக்கிறது. இதைப் போலவே இதே காவிரி மைசூரிலும் இரு புறமும் சுற்றிச் சூழ்ந்து ஒரு திரு அரங்கத்தையும் திரு அரங்கரையும் திரு அரங்கப்பட்டினத்தையும் உண்டாக்கி இருக்கிறது. இதனை வடமொழியினர் சிறீரங்கம், சிறீரங்கர், சிறீரங்கப்பட்டினம் எனக் கூறுவர். அாங்கம் என்பது தமிழ்ச் சொல்.

காவிரியாற்றிற்கு இருபுறமும் கரை கட்டிய மன்னன் கரிகாற் சோழனவான். இவனுக்குத் திருமாவளவன் என்றும் பெயர் உண்டு. சிறந்த போர்வீரன். இவனது அறிவும் ஆற்றலும் எவராலும் மறக்க முடியாதவை. தமிழகத் தலைமை தாங்கிய வளவன் ' எனப் பெயர் பெற்றவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/34&oldid=487632" இலிருந்து மீள்விக்கப்பட்டது