பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so வாழும் கவிஞர்கள் பற்றி ஆராயவேண்டும் என்ற எனது நெடுநாளைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இங்ங்ணம் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இந்தவகையில் முதலில் மரபுக் கவிஞர்களின் படைப்புக்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொருவராக அறிமுகம் செய்து படைப்புக்களை நோக்குவோமாக, மரபுக் கவிதை கவிதை என்றால் என்ன? வினா மிகவும் எளிதானதுதான். ஆனால் அதற்கான விடையிறுப்பதோ எளிதானதல்ல. கவிதையின் இலக்கணத்தை மேற்புல அறிஞர்கள் கூற முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் வெற்றியடையவில்லை. கவிதை, "ஒலிநயம் அமைந்த சொற்களின் கட்டுக் கோப்பு, அஃது இன்பத்தை உண்மையுடன் இணைப்பது, அறிவுக்குத் துணையாகக் கற்பனையைக் கொண்டிருப்பது என்பது ஜான்சன் என்பாரின் கூற்று. கார்லைல் என்பார் "இசை தழுவிய எண்ணமே கவிதை" என்று வரையறுப்பர். இங்ங்னம் மேற்புல அறிஞர்கள் கூறியவை கவிதையின் இலக்கணத்தைத் திட்டமாக வரையறுக்க முடியவில்லை. இனி,நம் நாட்டு அறிஞர்கள் கூறுவதையும் காண்போம். சீதாப் பிராட்டியின் அழகை வருணிக்கப் புகுந்த கம்ப நாடன், பொன்னின் சோதி போதின் நாற்றம், தேனின் தீஞ்சுவை என்று ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லிப் பார்க்கின்றான். ஒன்று கூடப் பிராட்டியின் அழகு பற்றிக்கொண்டிருந்த கருத்தை வெளியிடும் ஆற்றல் பெற்றிருப்பதாகத் தோன்றவில்லை. இறுதியில்'செஞ்சொற் கவி இன்பம்" என்று சொல்லி மனநிறைவுபெறுகின்றான். உள்ளத்திலுள்ளவற்றை உணர்ச்சி பொங்கத் தெள்ளத் தெளிந்த சொற்களால் எடுத்துரைப்பதுதான் கவிதையாகும். கவிமணி அவர்களும், உள்ளத் துள்ளது கவிதை -இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை தெளிந்து ரைப்பது கவிதை என்று கவிதைக்கு இலக்கணம் கூறுவர். கவிஞர் கண்ணதாசன் "கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம். கட்டவிழ்ந்து துள்ளிவரும் சிந்தனைகள், சொற்கோலமாக வருவதே கவிதை" என்று ஒரு சொற்பொழிவில் கூறியதாக நினைவு.