பக்கம்:வாழும் வழி.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வாழும் வழி


வேண்டுவார்வேண்டட்டும்; யான் இனிமை பொருந்திய தமிழ்ச்சொல்லால் பாடிய பாட்டாகிய மலரை நினக்குச் சூட்டத்தக்க தமிழ்ப் பிறவியையே வேண்டுவன்; எனக்கு வீடு (மோட்சம்) வேண்டுவதன்று” என்பதாம். பற்றைத் துறந்த இச் சிவப்பிரகாச முனிவருக்குள்ள மொழிப் பற்றைப் பாருங்கள் ஒவ்வொரு கடவுளடியாரும் “பிறப்பை நீக்கி முத்தியை அளி” என்று கடவுளை நோக்கிக் கதற, இவர் மட்டும் “தமிழ்ப்பாட்டுப் பாடத் தகுந்த பிறவியை எனக்குக் கொடு” என்று கதறுகின்றார். உண்மையில் வீடு வேண்டாம் என்பதா கருத்து ? இல்லை. தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இனிமை பொருந்திய தமிழினால் கடவுளைப் பாடி வணங்க வேண்டுமென்பதே இச்செய்யுளின் உண்மைக் கருத்து. நாமும் நம் இறைவனுக்குத் தமிழ்ச்சொல் மலர் சூட்டத்தக்க பிறவியை வேண்டுவோமாக.

மற்றும், தமிழ்ப்பாட்டின் இன்றியமையாமைக்குப் பெரிய புராணத்துச் சேக்கிழார் வாக்கிலிருந்து ஒரு சிறந்த சான்று காண்போம்:

சிவபெருமான் வழக்கிட்டுச் சுந்தரரைத் தடுத்தாட் கொண்டார். தடுத்தாட் கொண்டவர் சிவனே எனவறிந்த சுந்தரர் உளங்கனிந்து நிற்கின்றார் அவ்வமயம் கடவுள் சுந்தரரை நோக்கிக் கூறியதாவது:-

“மற்று நீ வன்மை பேசி வன்றொண்டன் என்னு நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பில் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொல் தமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/108&oldid=1110471" இருந்து மீள்விக்கப்பட்டது