புலவர் சுந்தர சண்முகனார்
113
பெற்றுள்ளா னென்றால், அதற்குக் காரணர் பத்தாவது வகுப்பு ஆசிரியர் மட்டுந்தான் என்று சொல்வது எங்ஙனம் பொருந்தும்? அட்டை வகுப்பு ஆசிரியர் அ-ஆ சொல்லிக் கொடுக்காவிட்டாலும், மேலுந் தொடர்ந்து ஒன்பதாவது வரை மாணவன் படித்துக்கொண்டு வந்திரா விட்டாலும் பத்தாவது வகுப்பாசிரியர் என்ன செய்ய முடியும்? எழுத்தே அறியாத இருபது வயதினன் ஒருவனை ஒன்பது மாதத்தில் பத்தாவது தேர்வில் தேர்ச்சி பெறும்படிச் செய்ய அவராலாகுமா? முடியாதன்றோ?
எனவே, இன்று காணப்படுகின்ற இனி காணப் போகின்ற விஞ்ஞான வெற்றிகளனைத்திலும் பழங்கால மனிதர்க்கும் பங்குண்டு என்பதை மறக்கவும்-மறுக்கவுங் கூடாது. இதனை யின்னுஞ் சிறிது ஆராய்வோம்.
புதிதாக ஒரு பொருளை உண்டாக்கவோ, காப்பாற்றவோ, மறைக்கவோ (அழிக்கவோ) மனிதனால் முடியாது. ஆனால், மனிதனே அம் முத்தொழிலைச் செய்வதுபோல் நமக்குத் தோன்றும். அத்தோற்றம் வெறுங் கானல் நீரே. ஓடம் மனிதனை அக்கரையிற் சேர்க்கிறது என்றெண்ணுகிறோம். அது தவறு. மனிதனே ஓடத்தை அக்கரையிற் சேர்க்கிறான் என்பதே உண்மை. அதுபோல, மனிதன் முத்தொழில் செய்யவில்லை. அவன் ஓடம். மற்றோர் ஆற்றலே அவனைச் செய்விக்கின்றது. அவ்வாற்றலுக்குப் பெயர் இயற்கையென்று சிலரும், இறையென்று சிலரும் இயம்புவர். அதனாலென்ன? தமிழ் என்றாலும் இனிமை என்றாலும் சொல்தானே வேறு? பொருள் ஒன்றுதானே!