பக்கம்:வாழும் வழி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வாழும் வழி



அங்ஙனம் மனிதனால் முத்தொழில் செய்ய முடியாதென்றால் அவன் செய்வதுதான் என்ன? என்ற வினாவிற்கு விடைவேண்டும். நாற்காலி யுண்டாக்கினவன் யார்? மனிதன். நாடகம் பார்க்கும்போது நடிகன் மேலுள்ள வெறுப்பால், அந் நாற்காலியைத் தூக்கி யடித்து ஒடித்து உடைத்து அழித்து பின் அதனை அடுப்பிலிட்டு எரித்துச் சாம்பலாக்கியவன் யார்? மனிதனே! ஏன் - இங்கு அவன் முத்தொழில் செய்ததாக மேளதாளத்தோடு ஒத்துக் கொள்ளலாமே? முக்காலும் முடியாது. எப்பொழுது நாற்காலியை ஒடிக்கிறானோ, புத்தகத்தையும் துணியையுங் கிழிக்கிறானோ, ஒருவரிடம் ஒரு பொருளைக் கொடுக்கும்போது பதனமாக எடுத்துக்கொண்டு போ என்று நம்பிக்கையிழந்து அறிவுரை புகட்டுகிறானோ, அப்பொழுதே, மனிதனால் எதையும் நிலையாகக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகின்றது. நாற்காலி உண்டாக்கினான் என்றால் நடுத்தெருவில் நின்று கொண்டு ‘நாற்காலியே வா’ என்றதுமா நாற்காலி வந்துவிட்டது? பேசும் படத்தில் திடீரெனத் தோன்றும் நாற்காலியும் தச்சன் கைவேலை தங்கியதன்றோ? மனிதன் மரத்தைத்தானே நாற்காலியாகச் செய்தான்? மரம் ஏது? விதையைத்தானே மரமாக்கினான்? அது போகட்டும். நாற்காலியை மறைத்தானென்றால், நடுத்தெருவில் நின்றுகொண்டு ‘நாற்காலியே போ’ என்றதுமே நாற்காலி உலகத்தைவிட்டு முற்றிலும் மறைந்துவிட்டதா? அதனையுடைத்துத் தனித்தனிக் கட்டையாக்கினான்; கட்டையை விறகாக அடுப்பில் இட்டுச் சாம்பலாக்கினானல்லவா? நாற்காலி மறைய வில்லையே; இப்போது சாம்பல் உருவத்திலுள்ளதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/116&oldid=1111511" இலிருந்து மீள்விக்கப்பட்டது