பக்கம்:வாழும் வழி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வாழும் வழி


கேட்பதை உலகியலில் எப்போதோ சில நேரங்களில் கண்டிருக்கிறோம். ‘இவன் வேறு வந்துவிட்டானே - எப்பொழுது தொலைவான்?’ என்று வெறுக்கக் கூடிய நிலையில் அடிக்கடி வந்து ஆணியடித்துக்கொண்டு அமர்ந்துவிடுபவர்களைப் பார்த்து இப்படி யாரும் கேட்பதில்லை. நீண்ட நாட்களாக வராமல், எப்போதோ ஒரு நேரம் அரிதாக வந்து தலையைக் காட்டிவிட்டுப் போகிறவர்களை நோக்கியே இப்படிக் கேட்பது உலக வழக்கம். அரிதாக வருவதற்கும் அத்திபூப்பதற்கும் என்ன ஒப்புமை? ஆராய்வோம்.

நாம் சிறுவராயிருந்தபோது அத்திப் பூவைப் பற்றி என்னென்னவோ கேள்விப்பட்டிருக்கிறோம் சிறுவர்களோடு பேசிக்கொண்டும் இருந்திருக்கிறோம். ஏன் - எப்போதுமே பலர், சிறுவயதில் பேசிக்கொண்ட கேள்விப்பட்ட அதே அளவில்தான் உள்ளனர்!.

‘அத்திப்பூ பார்த்திருக்கிறாயா?’ என்று கேட்பான் ஒரு சிறுவன். ‘அத்தி மரத்தில் பூவே பூப்பதில்லை’ என்பான் மற்றொரு சிறுவன். ‘பூ இல்லாமல் எப்படிக் காய் காய்க்கும்?' என்று கேட்பான் இன்னொருவன். ‘இருட்டினதும் பூத்து விடிவதற்குள் காய்ந்துவிடும்’ என்று ஒரு பதில் வரும். அப்படியென்றால் இதுவரையும் அத்திப்பூவை யாராவது பார்த்திருக்க வேண்டுமே என்று ஒரு கேள்வி புறப்படும். எல்லோரும் தூங்கின பின்பு பூத்து, எல்லோரும் விழித்துக்கொள்வதற்குள் காய்த்துவிடும்’ என்ற பதில் கிடைக்கும். ‘அப்படியென்றாலும் யாராவது ஒருவர் வேண்டுமென்றே இரவு முழுவதும் விழித்திருந்து கண்டுபிடித்திருப்பாரே’ என்ற கேள்வி எழும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/120&oldid=1111807" இலிருந்து மீள்விக்கப்பட்டது