புலவர் சுந்தர சண்முகனார்
11
அவ்வாறு மக்கள் வாழ்வுநெறிக்கு வேண்டிய வழியைக் கண்டுபிடிக்க நாம் முயலுமுன், நம் முன்னோருள் எவரேனும் ஏதேனும் கண்டுபிடித்துள்ளனரா? அப்படியிருப்பின், அந்த வழியும் நம் அறிவுக்குப் பொருந்தின் நாம் ஏன் அதனைக் கடைப்பிடித்தால் ஆகாது? அவ்வாறு கண்டுபிடித்துக் கூறிப்போந்தவர் எவராயிருக்கலாம்?
சுற்றி வளைத்துக்கொண்டு காலத்தைக் கடத்துவதேன்? வாழ்க்தைத் துணை நூலாகிய திருக்குறளை வையகத்திற்கீந்த வள்ளுவரே நமக்கு நல்ல வழிகாட்டியாவார். அவர் வாழ்வதற்கு வழிசொல்லியுள்ளார். அஃது என்னென்று நோக்குவோம்.
“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழாதவர்.”
என்பது திருக்குறள். பழியின்றி வாழ்பவரே உண்மையில் வாழ்பவராகக் கருதப்படுவர்; புகழின்றி வாழ்பவர் உண்மையில் வாழாதவராகவே கருதப்படுவர் என்பது குறட் கருத்து.
இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? ஒருவன் எவ்வளவுதான் படிப்பு - பட்டம் - பதவி பணம் முதலியன பெற்று, மாடமாளிகை கூடகோபுரம் கட்டி வாழினும், நீதியின்றி, நேர்மை யின்றி, பலரும் வெறுத்தொதுக்கும்படிப் பழிச் செயல்கட்கு ஆளாயியிருப்பானேயாயின், அவன் வாழ்வு அத்தனையும் நாடகமேடை வாழ்வாகிவிடும். மற்றொருவன், எவ்வசதியும் அற்றவன்; ஆனால் நேர்மையாளன்;