பக்கம்:வாழும் வழி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வாழும் வழி


பழியென்றால் உலகமே கிடைக்குமெனினும் விரும்பாதவன்; புகழ் எனின் உயிரும் கொடுக்கக்கூடியவன்; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். அத்தகையோன் கஞ்சி குடித்துக் கந்தையே உடுத்தினாலும் அவன் வாழ்வே பெருவாழ்வு பேரின்ப வாழ்வாகும் என்னும் நற்கருத்து இக்குறள் வாயிலாய்ப் பெறப்படுகின்றதன்றோ?

எனவே, வசைநீங்க வாழவேண்டும். இசையுடன் புகழுடன் வாழவேண்டும் என்பது போதரும்.

புகழுடன் வாழவேண்டுமெனின், எவ்வாறு வாழ்வது? எவ்வளவு பணம் எடுத்துக்கொண்டு எந்தக் கடைக்குச் சென்றால் புகழை விலைக்கு வாங்கி வரலாம்? புகழ் என்ன கடைச் சரக்கா?

ஒருவன் பெரிய படிப்புப் படித்திருப்பினும், பட்டங்களும் பல பெற்றிருப்பினும், மாபெரும் பதவிகளில் வீற்றிருப்பினும், மலை மலையாய்ச் செல்வங்களைத் திரட்டிக் குவித்திருப்பினும் பிறர்க்குப் பயன்பட மாட்டான் என்றால், அவனைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை; கவலையில்லை. எவன் ஒருவன் பலர்க்கும் பலவகையிலும் பயன்படுகிறானோ, அவனைப் பற்றியே மக்களின் பேச்சு மூச்செல்லாம்! எனவே, பிறர்க்கு உதவவேண்டும். அதனால் புகழ் பெருக வாழவேண்டும். இதைத் தவிர உயிர்க்கு வேறு என்ன வேண்டியுள்ளது? இவ்வாறு உதவுபவரைப் பற்றியே மக்கள் உயர்வாகப் பேசிக்கொள்வர். இக் கருத்துக்களையே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/14&oldid=1103457" இலிருந்து மீள்விக்கப்பட்டது