பக்கம்:வாழும் வழி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

13



“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு”,

“உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்”

என்னும் குறள்கள் தெளிவுறுத்துகின்றன. ஈண்டு வள்ளுவர், ஈவதால்தான் இசை உண்டாகும்; இசை பெற்று வாழ்தல்தான் வாழ்தலாகும் என்ற குறிப்பை “ஈதல் இசைபட” என்னும் தொடரில் பொதிந்து வைத்திருப்பதை ஊன்றி நோக்குக.

பிறர்க்கு உதவுவது என்றால், சோம்பேறித் தடியர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்குவதன்று. மக்கள் ஒருவரோடு ஒருவர் அன்பு கொள்ளவேண்டும். ஒருவரையொருவர் மதிக்கவேண்டும். தாம் வந்த வழியினையும் தம் கீழ் உள்ளவர்களையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தாம் பெரிய மனிதர் என்று செருக்குக் கொண்டு, சமுதாயத்திலிருந்து ஒதுங்கித் தம்மைத் தாமே தனியிடத்தில் சிறைவைத்துக் கொள்ளலாகாது. எல்லோருடனும் கலந்து பழகவேண்டும். எவர் வீட்டிற்கும் போக வேண்டும். பிறர்க்கும் நமக்கும் நடுவே இமயமலை போல் குறுக்கிட்டுத் தடுத்து நிற்கும் வீண் ஆரவார ஆடம்பர முறைகளையெல்லாம் அடியோடு ஆணிவேருடன் களைந்தெறிய வேண்டும். தம்மாலான உதவிகள் அனைத்தையும் பிறர்க்கு அளிக்கத் தம்மை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். அத்தகையோர் வாழ்வே வாழ்வாகும் நிலையான நீடித்த வாழ்வாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/15&oldid=1103722" இலிருந்து மீள்விக்கப்பட்டது