பக்கம்:வாழும் வழி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

15


விருந்தோடு உண்' என்பதை மறக்க முடியுமா? மறுக்க முடியுமா? காக்கையும் அன்றோ இனத்தை அழைத்து உண்ணுகிறது. மேலும், வீடென ஒன்று கொண்டு, அதில் கணவன் மனைவியென இருவர் கூடி இல்வாழ்க்கை நடாத்துவது, உலகிற்கு உதவி உழைப்பதற்குத்தானே! ஒருவருக்கொருவர் உதவி ஒப்புரவு செய்துகொண்டாலே எவரும் எங்கும் வாழ முடியும். வாழ்க்கையின் அடிப்படை இதுவாகவே இருக்கவேண்டும். இவற்றையெல்லாம்,

“விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.”

“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”

முதலிய திருக்குறள்களால் திருவள்ளுவர் விளக்கியுள்ளார். மேலுமவர், எவ்வளவு பெருஞ்செல்வரா யிருப்பினும், விருந்தோம்பாதவர் ஏழைகளாகவே கருதப்பட்டு இழிக்கப்படுவார்கள் என்னும் கருத்தில்,

“உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.”

என்னும் குறளைக் கூற மறந்தாரில்லை. நாமும் அவர் மொழிகளை மறக்கலாமா? இவ்விருந்தோம்பலும் பெண்ணில்லா வீட்டில் நடைபெற வழியில்லை. இத்தொண்டில் பெரும்பங்கு பெண்பாலார்க்கே உரியதாம். அது அவர்களின் தனிக் கலையுங் கூட!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/17&oldid=1104111" இலிருந்து மீள்விக்கப்பட்டது