பக்கம்:வாழும் வழி.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வாழும் வழி


தன்வயப் படுத்துவதற்காகச் சில தொண்டுகள் செய்ய முற்பட்டான். அவள் அருகில் சென்றான். தலையிலுள்ள ஈரையும் பேனையும் எடுத்தான். கூந்தலைக் கோதி முடித்தான். தண்ணீரால் முகத்தைத் துடைத்துத் தூய்மை செய்தான். பொட்டிட்டான். மற்றும் பணிவிடைகள் பல புரிந்தான். இனி நம் வேண்டுகோளை மனைவி ஏற்கலாமென அரை குறையாய் நம்பினான். கட்டிக் கொண்டான்கையை. மெதுவாக, விருந்து வந்துள்ளளது என்று விண்ணப்பம் செய்தான். அவ்வளவுதான், அம்மைக்கு வந்தது சினம். எழுந்தாள்; ஆடினாள்; சரமாரியாகப் பாடினாள் சில பாடல்களை; அவன் ஓடினான்; விடவில்லை; தானும் ஓடினாள்; பழ முறத்தாலும் சாடினாள். பார்த்தார் ஒளவையார். அந்த வேகம் தம் பக்கமும் திரும்பிவிடுமோ என்று அஞ்சினார். இவ்வளவு நேரம் உண்ணக் காத்திருந்து ஏமாந்துபோன அவர் வாய், உண்பதற்குப் பதிலாக,

“இருந்து முகந்திருந்தி ஈரொடு பேன்வாங்கி
விருந்துவந்த தென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடிமுன் தான்”

என்று பாடத் தொடங்கிவிட்டது. இத்தகைய கொடிய நிலை குடும்பத்தில் கூடவே கூடாது. குளிக்கப்போய்ச் சேறு பூசிக்கொள்ளலாமா? இன்பத்திற்கன்றோ குடும்பம்? துன்பத்தைத் தூரத்தில் ஓட்டுவதே அறிவுடைமையாகும். ஆடவர்க்கு மனமில்லாது போயினும், பெண்டிர் விரும்பினால் விருந்தோம்ப முடியும். ஆதலின் அவர்கள் அக் கலையை மறவாமை கடமையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/24&oldid=1104130" இருந்து மீள்விக்கப்பட்டது