பக்கம்:வாழும் வழி.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

33


இப்படியே போய்க்கொண்டிருந்தால், எந்த வேலையும் ஒழுங்குறாது அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையாய்ப் போய்விடும். ‘செய்வன திருந்தச் செய்’ என்பது முதுமொழியல்லவா?

சிலர் செய்ய வேண்டிய வேலையை நிறுத்தி விட்டு, இன்பப் பொழுதுபோக்குக் களியாட்டங்களில் ஈடுபடுவதுண்டு. வெளித்தோற்றத்திற்கு அவர்கள் களியாட்டயர்வதாகக் காணப்படினும், அவர் தம் உள்ளத்தே ஐயோ, வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டோமே, எப்போது செய்வது, என்ன ஆவது என்ற எண்ணம் உறுத்திக்கொண்டேயிருக்கும். குறைவேலைக்காரர்கள் பொழுதுபோக்கினால் பெறும் போலி இன்பத்தைவிட, உரிய வேலையினை உரிய காலத்தில் முடித்து மனநிறைவு கொள்வதனால் உண்டாகிற இன்பமே பேரின்பம்! பேரின்பம்! இந்த உண்மையைப் பலர் உணர்வதில்லை.

சுற்றிவளைக்காமல் சுருங்கச் சொல்லின், எடுத்துக்கொண்ட வினையை எச்சமாக விடுவது - அதாவது வேலையைக் குறைவாக நிறுத்துவது, நம் திட்டங்களையெல்லாம் முறியடித்து, நம்மைக் குறிக்கோள் அற்றவராக்கி, நம் வாழ்வையே சீர்குலைத்துவிடும். எனவே, வேலையில் சிறிதும் குறை வைக்கக்கூடாது. வாழ்க்கையில் சிறு பகையிருப்பினும் அஃது எங்ஙனம் பெரிய பகையாக முற்றி நம் தலைக்கே கேடு விளைத்துவிடுமோ, அங்ஙனமே குறை வேலையும் செய்துவிடும். ஏன், வேறோர் எடுத்துக்காட்டும் உண்டே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/35&oldid=1104565" இருந்து மீள்விக்கப்பட்டது