38
வாழும் வழி
வினவினார். அதற்கவன், “புலவரீர் என் நாடு எதுவாயினும் ஆக அதைப்பற்றி நுமக்கேன் கவலை?” என்ற தெரிவித்துவிட்டான். பார்த்தார் புலவர். “அப்படி யாயின் நும் பேரையாவது அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதற்கும் அவ்விதமே பதில் கூறிவிட்டான் அவன். தற்புகழ்ச்சி என்பதே அவன் அகராதியில் இல்லை போலும் வேறொருவராய் இருப்பின் தம் பெருமைகளை வானளாவக் கொட்டி அளந்திருப்பார்கள் அல்லவா? உடனே அவன் புலவரிடம் விடைபெற்றுச் சென்று மறைந்தான்.
பின்னர், புலவர் அங்கு வந்த சிலரை வினவி, அவ்வரசன் ‘தோட்டி’ என்னும் மலைநாட்டிற்குத் தலைவன் எனவும், கண்டீரக் கோப்பெருநள்ளி எனும் பெயருடையன் எனவும் அறிந்துகொண்டார். அவனைப் புகழ்ந்து அழகாகப் பாடினார். பாடி, அப்பாடலைத் தமிழ்நாட்டிற்கு ஈந்து, தம் கடமையை முடித்ததாக எண்ணி ஆறுதல் அடைந்தார். இந்நிகழ்ச்சியை, அவர் பாடிய,
“கூதிர்ப் பருந்தின் இருஞ்சி றகன்ன
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
தன்னும் உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச்
செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன்
தொழுதனன் எழுவேன் கைகவித் திரீஇ
இழுதின் அன்ன வானினக் கொழுங்குறை
கானதர் மயங்கிய இளையர் வல்லே