உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





இலக்கியவியல்


6. தெவிட்டாத திருக்குறள்


“தேருந்தொறும் இனிதாந் தமிழ்”

என்பது தஞ்சைவாணன் கோவையில் ஒரு செய்யுட் பகுதி. இச்செய்யுள் எவர் வாயிலிருந்து வந்தது? “பொய் பிறந்தது புலவர் வாயிலே” என்பர் சிலர். இல்லையில்லை; புலவர்கட்குள்ளேயே ‘பொய்யா மொழிப் புலவர்’ பாடிய செய்யுள் இது. ஈடுபாடு கொள்ள ஈடுபாடு கொள்ளத் தமிழ் மிக மிக இனிக்கும் என்பது இதன் கருத்து. தமிழில் ஈடுபாடு கொண்டவர்கள் இதனை உணர்வர் - நம்புவர். கற்கண்டின் இனிமையைச் சுவைத்தே உணர வேண்டும் உணர முடியும் அல்லவா?

தமிழை ஆராய்ந்து இன்புறுதல் என்றால் என்ன? தமிழிலுள்ள தலைசிறந்த நூற்களை ஆராய்ந்து இன்புறல்தானே! அங்ஙனமெனின், தமிழ் நூற்களை ஆராய ஆராய இனிமை மிகும் என்பது போதரு மன்றோ? முதல் பொய்யாமொழிப் புலராகிய திருவள்ளுவரே கூறியுள்ளாரே! படிக்கப் படிக்க நூலின் நயம் இனிப்பதைப் போலப், பழகப் பழகப் பண்புடையவரது நட்பு இனிக்கும், என்பது அவர் கருத்து.

‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு’

என்பது அக்கருத்தமைந்த குறளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/43&oldid=1104836" இலிருந்து மீள்விக்கப்பட்டது