பக்கம்:வாழும் வழி.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வாழும் வழிஉண்மை அஃதெனில், ஆராய ஆராயத் தெவிட்டாது இனிக்கும் தமிழ் நூற்களுள் தலைசிறந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆராய்ந்து அவ்வின்பத்தைத் துய்க்கலாமே! இழப்பதேன்?

அத்தகையதொரு தமிழ் நூலைத் தேர்ந்தெடுத்தல் அரிதன்று; எளிது, மிக எளிது. அவ்வேலையை உலகம் நமக்குத் தரவில்லை. அதனை முன்னமேயே அது செய்து முடித்துவிட்டது. அந்த நாடறிந்த நூலை ஏன், உலகமறிந்த அத்தலைநூலை ஏறக்குறைய ஓரீராயிரம் ஆண்டுகட்கு முன்பே, சங்கத் தமிழ்ப் புலவர்களே - பன்னூற்கள் எழுதிய தமிழ்ப் பாவாணர்களே விருப்பு வெறுப்பின்றி ஒருமுகமாய்த் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஆம்; உள்ள உள்ள உள்ளம் உருக்கும் அந்தத் தமிழ் நூலை - ஆராய ஆராய அறிவு ஊற்றெடுக்கும் அந்தத் தமிழ் நூலை - சிந்திக்கும் சிந்தைக்கு இனிய, அது மட்டுமா, கேட்கும் செவிக்கும் இனிய, அம்மட்டுமா, சொல்லும் வாய்க்கும் இனிய அந்தத் தமிழ்நூலை அவர்கள் அப்போதோ தேர்ந்தெடுத்துவிட்டனர்.

“அருங்குறளும் பகர்ந்ததற்பின் போயொருத்தர்
வாய்க் கேட்க நூலுளவோ”

என்றார் நத்தத்தனார்.

“உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”

என்றார் மாங்குடி மருதனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/44&oldid=1104845" இருந்து மீள்விக்கப்பட்டது