பக்கம்:வாழும் வழி.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

63


வேண்டுதல் என்ற சொல்லுக்கு விரும்புதல் என்னும் பொருள் உண்மையை ‘வேண்டுதல் வேண்டாமையிலான்’ என்று தொடங்கும் குறளானும் உணரலாம். வேண்டுங்கொல்லோ என்றால், விரும்புவான்கொல்லோ - விரும்புவானோ என்பது பொருள். ஈண்டு, வேண்டும் என்பது ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று. அஃது, ஆண்பால் ஒருமைக்கும் உரியது என்பதைத் தமிழிலக்கணம் கற்றோர் நன்கறிவர். மேலும், இந்த வாய்ப்பாட்டு வினைமுற்று ஆட்சியை வள்ளுவர் பல குறள்களில் கையாண்டுள்ளார் என்பதனைத் திருக்குறள் கற்றவர் நன்குணர்வர். எனவே இந்தக் குறளுக்கு, “முன்னர் விருந்தினரை ஒம்பிப் பின்னர் மிஞ்சியிருந்தால் தான் உண்ணும் உளநிலை பெற்றிருப்பவன், வித்தினை - விதை நெல்லை - விதைத் தானியத்தை நிலத்தில் இடவும் விரும்புவானோ? மாட்டான்; விருந்தினர்க்குச் சமைத்து அளிக்கவே விரும்புவான்” என்று பொருள் கூறுவது முன்னதினும் சிறந்ததொன்றாம்.

பரிமேலழகர் இந்தக் குறளை, விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக அமைத்துக் கொண்டு (3, 4, 5 குறள்களில்) விருந்தோம்பலின் பயன் கூறப்பட்டதாகச் சொல்கிறார். பரிதியாரோ ஏழாவது குறளாக அமைத்துக்கொண்டுள்ளார். ஏன்? இதனை மூன்றாவது குறளாகக் கொண்டு, விருந்தோம்புவானது உள்ளப் பண்பின் உயர் எல்லையைச் சிறப்பித்தாகக் கொள்ளலாமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/65&oldid=1107057" இருந்து மீள்விக்கப்பட்டது