புலவர் சுந்தர சண்முகனார்
65
உண்டு. சிறப்புப் பெயர் பெற்ற ஒரு நூல், நாளடைவில் தன் இயற்பெயரை இழந்து விடுவதும் உண்டு. மாணிக்கவாசகர் எழுதிய நூலும் இந்நிலைக்கு உள்ளானதேயாம். அதாவது திருவாசகம் என்னும் பெயர் இந்நூலின் இயற்பெயரன்று; பின்னால் ஏற்பட்ட சிறப்புப் பெயரேயாம்.
அங்ஙனம் எனில், திருவாசகத்தின் இயற்பெயர் யாது? அதனை நான் கண்டுபிடித்திருக்கிறேன். கண்டுபிடித்த விதத்தினையும் கூறுவேன்.
பல தலைப்புக்களின் கீழ், சிவன்மேல் பாடப்பட்ட தோத்திரப் பாடல்களின் தொகுப்பு நூலாகவே திருவாசகம் காட்சியளிக்கிறது. அந்நூலுள், சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி, ஆனந்தமாலை, அச்சோப் பதிகம் முதலிய ஐம்பத்தொரு பகுதிகள் (தலைப்புகள்) உள்ளன. பெரும்பாலான பகுதிகளில், ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வரக்கூடிய சொல்லோ அல்லது தொடரோ அப்பகுதியின் தலைப்புப் பெயராக அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, எம்பாவாய்' என்று பாடல்தோறும் முடியும் பகுதிக்கு ‘திருவெம்பாவை’ என்ற பெயரும், ‘பள்ளி எழுந்தருளாயே’ என்று பாடல்தோறும் முடியும் பகுதிக்கு ‘அச்சோப் பதிகம்’ என்ற பெயரும் உள்ளமை காண்க. இவற்றுள் ஒவ்வொரு பகுதியும் பல ஊர்களில் பல காலங்களில் பாடப்பட்டதாக எழுதப்பட்டிருக்கிறது.