வாழும் வழி என் கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். வாழ்வியல், இலக்கியவியல், மொழியியல், விஞ்ஞானவியல் என்னும் நான்கு பிரிவாக நூலை வகுத்துக் கொண்டு கட்டுரைகளை அமைத்துள்ளேன். அவற்றுள் முதல் பிரிவாகிய வாழ்வியலைச் சேர்ந்த கட்டுரைகளுள் முதல் கட்டுரையாகிய ‘மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி’ என்னும் தலைப்பே, இந்நூலுக்குப் பெயர் கொடுப்பதில் எனக்குத் துணைபுரிந்துள்ளது.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல் இல்லாமல், எதையும் சொந்த ஆராய்ச்சி அறிவுக்கண் கொண்டு துருவி நோக்கி உண்மை காணும் பயிற்சி, வளர்ந்து வரும் வாழத் துடிக்கும் இளைஞர் உலகிற்கு மிகவும் இன்றியமையாதது என்பது என் பணிவான கருத்து. அத்தகு பயிற்சி பெறுவதில், படிப்பவர்க்கு என் ஆராய்ச்சி முடிவுகள் தூண்டுகோலாக நின்று துணைபுரியுமாயின் அதுவே எனக்கு வெற்றி.
இந்நூலுக்கு, உயர்திரு. ரா. தேசிகப் பிள்ளையவர்கள் அருள்கூர்ந்து அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அவர்கள் பேரறிஞர் கல்வி-கலை-நீதித்துறைகளில் அவர்தம் தொண்டு மிகப் பெரியது. பல்கலைக் கழகங்கட்குரிய பாட நூற்கள் எழுதி வெளியிட்டிருப்பவரும் பெரிய பெரிய தமிழ் நூற்களைப் பிரெஞ்சு மொழியில் பெயர்த்திருப்பதன் வாயிலாக உலக அறிமுகம் பெற்றிருப்பவருமாகிய அப்பெரியார்க்குச் சிறியேனது நன்றி உரியது.
சுந்தர சண்முகன்