உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வாழும் வழி


அவையடக்கம் - அந்நூலைப் படிப்பதால் உண்டாகும் பயன் - முதலியவற்றை எழுதிவிட்டே, பின்னர் முறையாக நூலின் உட்பொருளில் புகுவர். இதற்குப் பாயிரம் அல்லது முன்னுரை என்பது பெயர். திருவாசகத்தின் முற்பகுதியும் இன்னதே. இப்பகுதியில் மாணிக்கவாசகர் எழுதியுள்ள சில அடிகள் பின்வருமாறு:

“சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற வதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுது மோய உரைப்பன்யான்
................................ பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
.........................................
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.”

மேல் உள்ள அடிகளைக் கூர்ந்து நோக்குபவர்க்கு, இஃது ஒரு தனிப்பகுதியன்று; ஆசிரியரின் முன்னுரையே யாம் என்பது தெளிவாகப் புரியும்.

எனவே, மேற்கூறிய அடிகளிலிருந்து, ஆசிரியர் தம் முழு நூலுக்கும் சிவபுராணம் என்று பெயர் இட்டுள்ளார் என்பதும், தம் சிந்தை மகிழவும் பழவினை மாயவும் சிவபுராணம் உரைக்கிறார் என்பதும், இந்நூலைப் படிப்பவர்கள் சிவனது உலகமாகிய வீட்டுலகில் பலரும் ஏத்தும்படி வீற்றிருப்பர் என்று நூற்பயன் கூறியுள்ளார் என்பதும் பிறவும் புலப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/70&oldid=1107076" இலிருந்து மீள்விக்கப்பட்டது