பக்கம்:வாழும் வழி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

71


சேக்கிழாரும் பிறரும், நூலின் முற்பகுதியில் அவையடக்கமும், நூலின் பெயரும், நூலைப் படிப்பதனாலாம் பயனும் கூறிப்போந்துள்ளனர். அவற்றை அவர்தம் நூற்களில் கண்டுகொள்ளலாம். இருப்பினும் இங்கே ஒன்று மட்டும் குறிப்பிடத்தக்கது:

கம்பர் தமது நூலுக்கு ‘இராமாவதாரம்’ என்றே பெயர் வைத்தார். இதனை அவர் பாடியுள்ள 'இராமா வதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோம்அறு மாக்கதை' என்ற பாடற் பகுதியால் உணரலாம். இவரைப் போலவே சேக்கிழாரும் தமது நூலுக்குத் திருத்தொண்டர் புராணம்’ என்றே பெயர் வைத்தார். இதனை அவர் பாடிய “இங்கிதம் நாமம் கூறின்... திருத்தொண்டர் புராணம் என்பாம்” என்னும் பாடற் பகுதியால் அறியலாம்.

எனவே, கம்பரிட்ட ‘இராமாவதாரம்’ என்னும் பெயர் மறைய, இராமாயணம் என்ற பெயரே பின்னர் நிலைத்துவிட்டதைப் போல, சேக்கிழார் இட்ட ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் பெயர் மறைய, ‘பெரிய புராணம்’ என்னும் பெயரே பின்னர் நிலைத்துவிட்டதைப் போல, மாணிக்கவாசகர் இட்ட ‘சிவபுராணம்’ என்னும் பெயர் மறைந்து போக, பின்னர் திருவாசகம் என்னும் பெயரே ஆணிவேர் விட்டுப் பதிந்து நிலைத்துவிட்டது.

ஆனால் இங்கே இரக்கத்திற்கு (பரிதாபத்திற்கு) உரிய செய்தி ஒன்று உள்ளது. அஃது என்ன? கம்ப ராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’ என்பதும், பெரிய புராணத்திற்குச் சேக்கிழார் இட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/73&oldid=1107079" இலிருந்து மீள்விக்கப்பட்டது