பக்கம்:வாழும் வழி.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வாழும் வழி


பாட்டன் பூட்டன் காலத்தவை (கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் ஒருவர் ஒருமுறை எங்கள் இல்லம் போந்து இவ்வோலைச் சுவடிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து சென்றுள்ளார்.) இந்தப் பழைய திருவாசக ஓலைச் சுவடியில், சிவபுராணம் என்னும் தலைப்பின்கீழ் ஒரு விளக்கமும் இல்லை. மற்ற தலைப்புகளுக்கு மட்டுமே விளக்கம் காணக் கிடக்கிறது. எனவே, மற்ற தலைப்புகளினும் சிவபுராணம் என்னும் தலைப்பு வேறு பட்டதென்பதும், அது முழு நூலின் பெயரென்பதும், நுனித்துணரப்படலாம். ஆனால், பாயிரத்தையும் ஒரு பகுதியாகக் கருதி, அதன்மேல் சிவபுராணம் என்னும் தலைப்பை வைத்து ஆணியடித்துவிட்ட பிற்காலத்தவர் ஒருவர், ‘சிவனது அநாதி முறைமையான பழமை’ என்னும் விளக்கத்தைச் சேர்த்திருக்க வேண்டும். மற்ற தலைப்புகளுக்கு விளக்கம் இருக்கும்போது, சிவ புராணம் என்னும் தலைப்புக்கு மட்டும் விளக்கம் இல்லாதிருப்பதை அவரால் பொறுக்க முடியாதல்லவா?

மறுப்பு-4:- திருவாசகத்தின் சிவபுராணம் என்னும் தலைப்பிட்ட முதல் பகுதிக்கும் முன்னால், ‘நூற் சிறப்பு’ என்னும் தலைப்பில்,

“தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகம் என்னுந் தேன்.”

என்னும் செய்யுள் பல சுவடிகளிலும் காணக் கிடக்கின்றது. இச் செய்யுளில் திருவாசகம் என்றுதானே குறிக்கப்பட்டுள்ளது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/78&oldid=1107322" இருந்து மீள்விக்கப்பட்டது