பக்கம்:வாழும் வழி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வாழும் வழி


முன்கூட்டியே தயாராயிருந்து இன்னது இன்னது செய்ய வேண்டும் என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன ‘வரசொல்ல’ என்னும் சொல்லைக்கொண்டு, அவர் வடார்க்காடு மாவட்டத்தார் எனத் துணிந்துகொண்டேன். மற்ற மாவட்டத்தார்கள் ‘வரும்போது - போம்போது’ என்றோ, அல்லது கொச்சையாக ‘வரச்ச-போச்ச’ என்றோ சொல்வதற்குப் பதிலாக, வடார்க்காடு மாவட்டத்தினர், ‘வரசொல்ல - போசொல்ல’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் இந்த மாவட்டத்தினருள்சிற்சிலர், ‘என்னாங்க - இல்லிங்க’ என்பதற்குப் பதிலாக ‘என்னாப்பா - இல்லப்பா’ என்றும், ‘பல்லு குச்சி’ என்பதற்குப் பதிலாகப் ‘பெல்லு குச்சி’ என்றும், ‘சாமி (கோயில் விக்ரகம்) வருகிறது’ என்பதற்குப் பதிலாகச் ‘சாமியார் வருகிறார்’ என்றும் சொல்கின்றனர். இப்படி சில சொல்லொலிக் குறிகளைக் கொண்டு வடார்க்காடு மாவட்டத்தினரை அடையாளங் கண்டுகொள்ளலாம்.

ஒருமுறை சென்னையிலுள்ள பேர்பெற்ற எலும்புருக்கிநோய் மருத்துவ வல்லுநர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்போது, ‘நீங்கள் திருநெல்வேலிக்காரரா?’ என்று நான் அவரைக் கேட்டேன். ‘இல்லை, சென்னைதான் என்ற பதில் வந்தது. இப்போது சென்னையாக இருக்கலாம்; ஆனால் உங்கள் பழங் குடியிருப்பு திருநெல்வேலிப் பக்கமாகத்தான் இருக்க வேண்டும்’ என்றேன் நான். அவரும் ஒத்துக்கொண்டார். ஒலி வேறுபாட்டைக் கொண்டு ஓரிரு நிமிடத்தில் திருநெல்வேலி மாவட்டத்தினரை அடையாளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/88&oldid=1108160" இலிருந்து மீள்விக்கப்பட்டது