பக்கம்:வாழையடி வாழை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'வாழையடி வாழை' 23


நெஞ்சினர்: அருள் வடிவான அருளாளர்; பிறர் உயிர்கள் படுகின்ற துன்பத்திளைக் காணப்பொறாத கருணை உள்ளத்தினர் அவர். இதனை அவரே, 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம வாடினேன்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

'பூத்தலை அறா அப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்,
கறங்குமணி திண்தேர் கொள்ளெனக் கொடுத்த,
பரந்தோங்கு பண்பிற்


பாரிப் பெருமகனின்' அருள் நெஞ்சம் அவருக்கு வாய்த்திருந்தது. குளிரால் நடுங்கிய கோல மயிலுக்குத் தான் போர்த்திருந்த போர்வையினையே வழங்கிய 'வள்ளல் பேகன்' வழி வந்தவர் வடலூர் வள்ளலார்.

நமக்கொன் றுரையா ராயினும் தமக்கொன்று
இன்னா இரவின் இன்துணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் துாதே.”

குறுந்தொகை: 266


என்று புலம்பும் குறுந்தொகைத் தலைவியின் தூய அன்பு நெஞ்சம், வள்ளலாரின் வற்றாத அருள் நெஞ்சமாகும். எனவே, அவர் 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்' வாடினார்.

சைவ சித்தாந்தக் கொள்கையே உலகில் தலையாயது. இதனை ஐரோப்பியக் கிறிஸ்தவப் பாதிரி மாரும் ஒப்பி உண்மை புகன்றுள்ளனர். உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் பசுவாகவும், அருள் நிறைந்த ஆண்டவன் பதியாகவும், பசு பதியோடு ஒன்று கலப்பதைத் தடுத்து நிற்பது பாசமாகவும் பெரியோர் கூறுவர். பாசம் அற்றால் பசுக்கள் பதியினைச் சேரலாம். 'பற்றுவது பந்தம்; அப்பற்றுதல் விடு’ என்பார் வள்ளலார். இதனையே 'திருவாய் மொழி’, 'அற்றது பற்றெனில் உற்றது வீடு’ என்று பேசுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/25&oldid=1461215" இலிருந்து மீள்விக்கப்பட்டது