பக்கம்:வாழையடி வாழை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

‘வாழையடி வாழை’


பாட்டிசைத்துத் தோணிகளோட்டி வரும் தமிழனைக் கூறுமுகத்தான், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு நல்லதொரு சித்திரம் திட்டிக் காட்டியுள்ளார்.

'சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம்!'

பாரத தேசம்: 5


'மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள்’ (Poets are the unacknowledged legislators of the worlds) என்றார் 'ஷெல்லி'. மக்கள் வாக்குரிமை அளித்து அரசியல் பதவிக்கு அனுப்பி வையாமல், மக்கள் கவியாய் விளங்கும் பாரதியார், மக்கள் நலனுக்குத் தம் கவிதையில் திட்டம் தீட்டுகின்றார். 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்', என்றும், 'வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!' என்றும், பாரதியார் வகுக்கும் திட்டம் பாராட்டத் தக்கதன்றாே!

ஒத்து வரும் பொதுவுடைமைத் தத்துவத்தினையும் பொருந்தப்பாடுகின்றார் பாரதியார். 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற தொடரே பாரதியார் படைத்தளித்த தொடர்தானே! அவர் அளித்த பிச்சையன்றாே அது! 'ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில்’ என்றும், 'இழிவு கொண்ட மனிதரே இந்தியாவில் இல்லை' என்றும் கூறும் பாரதியார், மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தைக் கண்டிக்கிறார். மேலும்,

இனியொரு விதிசெய்வோம்அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!’

பாரத சமுதாயம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/38&oldid=1461226" இலிருந்து மீள்விக்கப்பட்டது