பக்கம்:வாழையடி வாழை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பாட்டுக்கொரு புலவன் பாரதி' 39


ஒற்றுமையில் முகிழ்க்கும் ஓர் உலக சமுதாயம் காணத்துடித்துக் கிடந்தார் பாரதியார்.

சான்றாேர்களைப் புகழ்கின்ற பாரதியாரின் பாட்டில் நயமும் நற்கருத்தும் நன்கு துலங்கக் காணலாம். டாக்டர் சாமிநாத ஐயர் அவர்களை வாழ்த்தும் போது,

'பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்; அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே!”

என்று அழகுபடப் பாடியுள்ளார். இதுபோன்றே தேசியத் தலைவர் 'காந்தியண்ணலை’ப் பாடும் பொழுதும்,

வாழ்கநீ! எம்மான்! இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாாததேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!”

என்று பொருட் பொருத்தமுறப் பாடியுள்ளார்.

'கல்விப் பணியே கலைமகள் பணி' என்பது பாரதியாரின் அழுத்தமான எண்ணம். இதனை.

'“இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்’

பாரதி: வெள்ளைத் தாமரை: 9


என்னும் பாடலில் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/41&oldid=1461229" இலிருந்து மீள்விக்கப்பட்டது