பக்கம்:வாழையடி வாழை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

‘வாழையடி வாழை’

கண்டு நாமனக்கும் பாடல்களைப் புனைந்துள்ளார், பாட்டுக்கொரு புலவராய் நாட்டு மக்கள் நெஞ்சில் உறையும் பாரதியார்.

'நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை’ என்கிறான் சேவகன்; மக்களுக்கு வாத்தியாய்த் வளர்ப்புத் தாயாய், வைத்தியனாய் விளங்கும் சேவகன் பெண்டுகளைத் தாய்போலப் பிரியமுற ஆதரித்து, நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் உள்ளான்.

'தீராத விளையாட்டுப் பிள்ளை’ எனத் தொடங்கும் பாடலைப் பல முறை பாடிப் பாடிச் சுவைத்துச் சுவைத்து மகிழ வேண்டும். கண்ணன் செய்யும் குறும்பில் ஒன்று காண்போம்.

'அழகுள்ள மலர்கொண்டு வந்தேஎன்னை
அழ அழச் செய்துபின், கண்ணைமூ டிக்கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான்:என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.”

கண்ணம்மாவைக் குழந்தையாக எண்ணிப் பாரதியார் பாடும் பாட்டு, உயரிய பாட்டாகும். பிள்ளைக் கனியமுதாய்ப் பேசும்பொற் சித்திரமாய் விளங்கும் கண்ணம்மாவின் உச்சிதனை மோந்தால், உள்ளத்தில் கருவம் ஓங்கி வளர்கிறதாம்! கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் கள்வெறி கொள்கிறதாம்! தழுவினால், உள்ளம் உன்மத்தமாகிறதாம்! நெற்றி சுருங்கக் கண்டால், நெஞ்சம் பதைக்கிறமாம்; கண்ணம்மாவின் கண்ணில் நீர் வழிந்தால், நெஞ்சில் உதிரம் கொட்டுகிறதாம்! கண்ணிற் பாவையன்ன கண்ணம்மா சொல்லும் மழலையில் துன்பம் தீர்த்து, முல்லைச் சிரிப்பால் மூர்க் கத்தினைத் தவிர்த்து, அன்பு தருவதில் தெய்வமாய் சின்னஞ்சிறு கிளியாய், செல்வக் களஞ்சியமாய் விளங்குகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/48&oldid=1461237" இலிருந்து மீள்விக்கப்பட்டது